Eye Foundation Team

News & Events

40 வயதை நெருங்குபவர்களுக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளார். குளுக்கோமா என்றால் என்ன? குளுக்கோமா என்பது கண் அழுத்த நோயாகும். கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் இந்த பிரச்சனையை ‘சைலன்ட் கில்லர்’ என்கின்றனர் மருத்துவர்கள். இந்த கண் அழுத்த நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும். இதன் காரணமாக பார்வையை இழந்தால் மீண்டும் பார்வையை திரும்பப்பெற வாய்ப்பில்லை. படிப்படியாக பார்வை இழக்க வைக்கும் இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது விளக்கும் மருத்துவர் இந்த நோயின் தன்மை, சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காப்பது எப்படி என்பது குறித்து கோவை தி.ஐ.பவுண்டேசன் மருத்துவமனை மருத்துவர் முரளிதர் கூறியதாவது, “உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்துவதற்காக குளுக்கோமா சங்கத்தின் ஒரு முயற்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் பேர் இவ்வகை நோயினால் தாக்கப்படுகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் குளுக்கோமா நோய் பாதிப்பைப் பற்றி அறியாமலும், முன்கூட்டியே இதுகுறித்து பரிசோதனை செய்யாமல், விட்டுவிட்டதால் மட்டுமே பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இது ஒரு பரம்பரை வியாதியாகவும், 40 வயதைக் கடந்த ஒருவருக்கு புதிதாகவும் வரலாம். இது பார்வையை பாதிக்கக்கூடிய நோயாகும். கண்ணீர் அழுத்த நோய் என்று அதை கூறலாம். கண்ணில் இருக்கும் திரவம் வடியாமல் இருப்பதால் இந்த நோய் பாதிப்பு உண்டாகி நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் இதன் பாதிப்பு தெரியாது. ஏனென்றால் நமது நேர் பார்வை நன்றாக இருக்கும். பக்கவாட்டில் மட்டுமே பார்வை மங்கலாகும் பின்னர், படிப்படியாக பார்வை முழுவதும் பறிபோகும். இந்தியாவில் கண் பார்வை இல்லாதவர்களில் 13 சதவீதம் பேருக்கு இந்த நோய் காரணமாக உள்ளது. 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே குழந்தையின் கண்கள் வீங்கி இருந்தால் உடனே குளுக்கோமா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை கட்டாயம் அதேபோல் அதிகமாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். நோயின் தீவிர தன்மையைப் பொருத்து மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோய் பாதிப்பால் பார்வை இழப்பு ஏற்படும்போது மீண்டும் அதனை சரி செய்ய முடியாது. மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு தேவை என்பதற்காகவே குளுக்கோமா வாரம் கடைபிடிக்கிறோம். மருத்துவ செலவு எவ்வளவு? குளுக்கோமா அறுவை சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். எங்கள் மருத்துவமனையில் இந்த வாரத்தில் குளுக்கோமா இலவச ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சைகளை சலுகை கட்டணத்தில் வழங்குகிறோம். உலக நடைமுறைகளை அறிந்துகொள்ள உதவுவது நமது கண்கள் தான். கண்களை முறையாக பராமரிக்க வேண்டும்” இவ்வாறு மருத்துவர் முரளிதர் கூறினார். Read more  

See all Our News