Eye Foundation Team

News & Events

கோவை: கரோனா நெருக்கடியினால் பலரும் வீட்டில் இருப்பதால் தொலைக்காட்சி, லேப்டாப், செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல மக்களும் தங்களின் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பணம் படைத்தவர் முதல் ஏழைகள் வரை அனைவரின் வாழ்க்கை நடைமுறைகளும் மாறிவிட்டன. தொழில்நுட்பம், ஆசிரியர் பணி உள்ளிட்டவை ஆன்லைன் மயமாகிவிட்டன. வீட்டில் இருந்தபடி வேலை செய்வது சௌகரியமாக இருந்தாலும்கூட உடல் நலனுக்கு அவை உகந்தது அல்ல. பெரும்பாலோனோருக்கு கண், தலை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மக்கள் பலரும் தாமாகச் சென்று கண் கண்ணாடிகளைத் தனியார் கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுபோன்று மருத்துவரின் மருத்துவ ஆலோசனை இல்லாமல் கண் கண்ணாடிகளை வாங்குவது சரியான முடிவு இல்லையென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாளடைவில் கண்ணில் பாதிப்பு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்டம் ஐ பவுண்டேஷன் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி கூறுகையில், “அதிக நேரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றின் திரைகளைப் பார்க்க நேரிடும்போது கண் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.முதலில் கண்களில் இருக்கும் திரவம் வற்றிப் போகும். இந்தத் திரவத்தை வற்றிப் போகவிடாமல் காப்பதற்கு மின்விசிறி, ஏசி போன்றவற்றை நேரடியாகக் கண்ணின் மேல் படும்படி வைக்கக் கூடாது. ஜன்னல்கள், மின் விளக்குகள் மூலம் வரும் வெளிச்சத்தின் அளவு குறைவாக வைக்க வேண்டும். ஆனால், முழுமையாகக் குறைத்துக் கொண்டு இருளில் இருக்கக் கூடாது” என்றார். ஆன்லைனில் கல்வி கற்கும்போது.. “குழந்தைகள் ஆன்லைனில் படிக்கும்பொழுது அவர்கள் அமரும் உயரத்தை விட சற்றுக் குறைவாக லேப்டாப், செல்போன்களை வைத்திருக்க வேண்டும். அதன் முன்பக்க உயரம் (Font size) 12 மில்லிமீட்டராக வைத்திருப்பது நல்லது. மிக முக்கியமாக செல்போன் உபயோகிப்பவர்கள் பின்பற்ற வேண்டியது 20-20-20 ரூல்ஸ்.அதாவது 20 நிமிடம் மின் திரைகளைப் பார்த்தபின்பு 20 நொடிகள் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். அந்த ஓய்வு நேரத்தில் தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை உற்று கவனிக்க வேண்டும். அதன்பின் 20 நொடிகள் கண்களை நன்கு சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க முடியும்.நீண்ட நேரம் மின் திரைகளைப் பார்க்கும் சிலருக்கு ப்ளூ ஃபில்டர் கண்ணாடிகள் (Blue filter glass) தேவைப்படும். அவர்கள் மருத்துவர்களை அணுகி முறையான சோதனைகளுக்குப் பிறகு கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி. தொடர்ந்து அவர் கூறுகையில், “யாரேனும் நிரிழிவு நோய் இருந்து அதனால் கண்ணில் ரத்த அழுத்தம் ஏற்பட்டால், இந்தக் கரோனா காலத்தில் மாத்திரைகள் கிடைக்கவில்லை என விட்டிருப்பர். அவ்வாறு செய்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மருந்து, மாத்திரைகள் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.கண்கள் வழியாக கரோனா பரவுகிறதா?கரோனா வைரஸ் நுழைவதற்கு கண்ணும் ஒரு வாய்ப்பாக உள்ளது. கண் சிவப்பாதலும் கரோனா தொற்றுக்கு ஒரு சிறிய அறிகுறியாக உள்ளது. இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. கண்கள் அடிக்கடி சிவப்பாவது, அடிக்கடி கண்களில் பூலை வெளியேறுவது இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும்.ஏன் ஆன்லைனில் கண்ணாடிகள் வாங்குவது ஆபத்து?இதுதொடர்பாக கண் கண்ணாடி ஆலோசகரும் மருத்துவருமான ராஜீவ் நாயர் கூறுகையில், “கண் கண்ணாடிகள் கிடைப்பதற்கு தாமதம் எதுவும் ஏற்படவில்லை. முறையான பரிசோதனையில் இல்லாமல் ஆன்லைன் மூலம் கண் கண்ணாடிகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அங்கு போலி கண்ணாடிகளை விற்கும் ஆபத்தும் உள்ளது. மருத்துவமனைகளில் கண் கண்ணாடிகள் அனைத்தும் உரிய கிருமிநாசினிகளைக் கொண்டு தூய்மை செய்யப்பட்ட பிறகே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கண் கண்ணாடி விற்பனைக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கண்ணாடிகளை உபயோகித்துவிட்டு வைத்தால், உடனடியாக அக்கண்ணாடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. சில கடைகளில் யூவி சேம்பர் எனப்படும் இயந்திரத்தில் கண்ணாடிகள் வைக்கப்பட்டு அதிலிருக்கும் கிருமிகள் முழுமையாக அழிக்கப்படுகின்றன” என்றார்.நீலநிற ஒளிகள் என்றால் என்ன?”மின் திரைகளில் தென்படும் நீலநிற ஒளிகளில் இரண்டு வகை உண்டு. அதில் ஒருவகை நம் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மற்றொரு வகை கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தனியாக கண்ணாடிகள் உள்ளன.ஆனால், இதை மருத்துவர்கள் நேரடியாகக் கடைகளுக்கு (அ) மருத்துவனைகளுக்கு சென்று ஆலோசனைகளைப் பெற்ற பிறகு பயன்படுத்த வேண்டும். ஏனெனில், தற்போது ஆன்லைனில் போலி ப்ளூ ஃபில்டர் கண்ணாடிகள் அதிகமாக விற்கப்பட்டுவருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றார் ராஜீவ் நாயர்.ஊரடங்கு காலத்தில் கண் வலி, தலை வலி ஏற்பட்டால் மக்கள் அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் போட்டுவிடுகின்றனர். இதனை உடல் ஆரோக்கியம் சார்ந்து இல்லாமல் செலவைத் தள்ளிப்போடும் நோக்கில் செய்வதால் பெரும்பாலானோர் மருத்துவர்களை அணுகுவதில்லை. இதனால் ஊரடங்கில் கண் கண்ணாடிகள் விற்பனை அதிகரித்ததாகத் தெரியவில்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உடலே மனிதனின் ஆகப்பெரும் செல்வம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது. கண்ணாடிகள் அதிகமாக விற்கப்பட்டுவருகின்றன. எனவே அதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

See all Our News